RSS

Monthly Archives: December 2011

2012 தமிழர்களுக்கு சிறப்பாக அமையட்டும்

கடந்துவா தமிழா கடந்துவா, மதம்களை கடந்துவா
விலகிவா தமிழா விலகிவா, ஜாதிமாயையுள் சிக்காமல் விலகிவா
உடைத்தெறி தமிழா உடைத்தெறி, ரசிகர்மன்றங்கள உடைத்தெறி
கிழித்தெறி தமிழா கிழித்தெறி, கட்சிக்கதரை கிழித்தெறி
பறந்துவா தமிழா பறந்துவா, நாடு கடந்து பறந்துவா
எல்லாம் கடந்து ஒன்றிணைவோம், இனத்தை மீட்போம் காப்போம்.
வீழ்வது நாமாயினும் வெல்வது தமிழாகட்டும்.

இந்த ஆங்கில புத்தாண்டு 2012 தமிழர்களுக்கு
சிறப்பாண்டாக அமையட்டும்.

Advertisements
 
1 Comment

Posted by on December 31, 2011 in Uncategorized

 

மண்ணை பாதுகாக்க – விவசாயிகளின் நன்மைக்கு

சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கு மரங்களைப் பேணிப் பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல், மண்ணையும் பாதுகாக்க வேண்டியது இன்று அவசியமாக உள்ளது. அதற்காக பல சமூக அமைப்புகள், தன்னார்வலர்கள் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர். அவர்களில், சென்னை புதுக்கல்லூரி பயோ – டெக்னாலஜி துறைத்தலைவரான முனைவர். சுல்தான் அகமது இஸ்மாயில் குறிப்பிடத்தகுந்தவர் ஆவார். நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் ஈடுபாட்டுடன் பங்காற்றி வருகிறார். இதற்காக தமிழக அரசின் அறிஞர் அண்ணா விருது, எக்ஸ்னோராவின் “சுற்றுச்சூழல் நண்பன்’ விருது உட்பட இங்கிலாந்து போன்ற நாடுகளின் விருதுகளையும் பெற்று இருக்கிறார். அவரிடம் பேசியதில் இருந்து…

“”1968 – ல் மாநிலக்கல்லூரியில் பி.யு.சி. படித்துக்கொண்டிருக்கும்போதே எனக்கு சுற்றுச்சூழலில் ஆர்வம் அதிகம். குறிப்பாக, இயற்கை வளமான மண் வளத்தைப் பாதுகாத்து, அதனைப் பேணுவதில் அதிகம் ஆர்வம் இருந்தது. எனவே சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை அறிவியல் படித்தபிறகு, கடல் ஆராய்ச்சி தொடர்பாக 1977 – ம் ஆண்டு எம்.ஃபில் படிக்க முடிவு செய்தேன். அதற்காக நான் அணுகிய பேராசிரியர் என்னை சேர்த்துக்கொள்ள மறுத்துவிட்டார். அந்த உதாசீனம் காரணமாக சுற்றுச்சூழலில் முக்கிய காரணிகளுள் ஒன்றாக உள்ள மண்ணைப் பாதுகாக்க எதாவது செய்ய வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டது.

அதன் காரணமாக, விவசாயிகளின் சிறந்த நண்பனாக விளங்கும் மண்புழுவைக்கொண்டு 1978 – ம் ஆண்டில் மண்புழுஉரம் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டேன். இவ்வாறுதான் எனக்கு சுற்றுச்சூழலில் ஆர்வம் ஏற்பட்டது. பலவிதமான சோதனைகள், முயற்சிகள் மேற்கொண்ட பிறகு, 1992 – ம் ஆண்டில் மண்புழு உரம் தயாரிக்கும் செய்முறைகள் குறித்த விளக்கக் கட்டுரை ஒன்றை “ஸ்பிக் பண்ணை செய்தி’ என்ற இதழில் எழுதினேன். மண்புழுவால்தான் மண்ணின் வளம் பெருகும். இயல்பாக மண்ணுக்கும், தண்ணீருக்கும் எந்தவித வாசனையும் கிடையாது. ஆனால் நம் நாட்டில் அதிக விளைச்சலைப் பெற வேண்டும் என்பதற்காக, அதிக வீரியம் உள்ள உரங்களையும், மரபணு மாற்றப்பட்ட விதைகளையும் பயன்படுத்தி வருகின்றோம். இதனால் மண்ணின் வளம் மெல்லமெல்ல நச்சுத்தன்மையை அடைந்து வருகின்றது. இதற்கு உதாரணமாக, பஞ்சாப் மாநிலத்தில் பந்தித்தா என்ற கிராமத்தைச் சொல்லலாம். இங்கு உள்ள விவசாயிகள் கோதுமை உற்பத்தியைப் பெருக்கவேண்டும் என்பதற்காக, ரசாயனங்கள் நிறைந்த ஆர்கோனா பாஸ்பேட், ஆர்கோனா குளோரைடு போன்ற உரங்களைப் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் அங்கு மண், நச்சுத்தன்மை உடையதாய் மாறிவிட்டது. எனவே இந்நிலத்தில் வளரும் மரம், செடிகள் கார்பன் டை ஆக்சைடு உட்கொண்டு ஆக்சிஜனை வெளியிடுவதற்குப் பதிலாக நச்சுத்தன்மை வாய்ந்த காற்றினை வெளியிடுகின்றன. இதனால் அங்கு வசிப்பவர்களில் பெரும்பாலான மக்கள் புற்று நோயாளிகளாக உள்ளனர். அந்த ஊரிலிருந்து வெளியூர்களுக்குச் செல்கின்ற ரயில்களில் அதிக எண்ணிக்கையிலான புற்று நோயாளிகள் மருத்துவ சிகிச்சைக்காக சென்று வருகின்றனர். இதனால் அந்த விரைவு ரயில்களை “கேன்ஸர் எக்ஸ்பிரஸ்கள்’ என்றே அழைக்கின்ற அவல நிலை அங்கு உள்ளது.

நம்நாட்டு விவசாயிகளிடம் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு குறைவாகவே உள்ளது. பத்திரிகைகள், தொலைக்காட்சி போன்ற ஊடகங்கள் எவ்வளவுதான் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து அறிவுறுத்தினாலும் அதை விவசாயிகள் ஆர்வத்துடன் தெரிந்து கொள்ள முன்வருவதில்லை. அதன்காரணமாக, அவர்கள் அதிக விளைச்சலைப் பெறுவதற்காக, நச்சுத்தன்மை நிறைந்த பூச்சிக்கொல்லி உரங்களையும், மரபணு மாற்றப்பட்ட விதைகளையும் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். இதற்காக இவர்களுக்கு விழிப்புணர்வு முகாம்கள்,பயிற்சிப் பட்டறைகள் நடத்தி வருகின்றோம். இதில் மரபணு மாற்றப்பட்ட விதைகளைப் பயன்படுத்துவதால், ஏற்படும் பாதிப்புகள், மண்புழு உரம் தயாரிக்கும் முறை போன்றவற்றை இலவசமாக சொல்லித் தருகின்றோம்.

ஆரம்பத்தில் எங்களுடைய இந்த முயற்சிகளுக்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. நாங்கள் நடத்துகின்ற இத்தகைய முகாம்களுக்குக் குறைந்த எண்ணிக்கையிலான விவசாயிகள் வரத் தொடங்கினர். ஆனால் தற்போது இந்தப் பயிற்சி முகாம்களுக்கு வருகின்ற விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இந்தப் பூமியினை நாம் அடுத்த தலைமுறையினரிடம் பத்திரமாக ஒப்படைக்க வேண்டியது நம் அனைவருடைய கடமை. எனவே பள்ளி மாணவ, மாணவியருக்கும் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள பிர்லா கோளரங்கத்தில் சுற்றுச்சூழல் தொடர்பான நிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றோம்” என்றார்.

 
Leave a comment

Posted by on December 31, 2011 in Uncategorized

 

தமிழா!!! "இதை நீ படிக்கனும்"


தமிழா!!! “இதை நீ படிக்கனும்”… “KOLAVERI song” மாதிரி “PROMOTE” செய்ய வேண்டும்!!! PLEASE!!! முல்லைப் பெரியாறு பற்றி அகில இந்திய அளவில் புயலைக் கிளப்பிவிட்டு – தமிழ் நாட்டை பைத்தியக்காரர்கள் வசிக்கும் இடம் என்று பேச வைப்பதில் வெற்றி பெற்று விட்டனர் கேரளத்தவர். மீடியாக்களில்,டெல்லியில், அகில இந்திய அளவில் கேட்கிறார்கள் -பலமாகக் கேட்கிறார்கள் ! “116 வருட சுண்ணாம்பு அணை – இன்னும் எவ்வளவு நாள் தாங்கும் ? தங்கள் இடத்திலேயே – தங்கள் செலவிலேயே – புதிய அணையைக் கட்டி, தமிழ் நாட்டிற்கு அதே அளவு தண்ணீரைத் தருவதாக கேரளா சொல்கிறதே – ஒப்பந்தம் எழுதிக் கொடுக்கிறோம் என்கிறார்களே. இதை ஏற்றுக் கொள்ள தமிழ் நாடு ஏன் மறுக்கிறது ? இது என்ன வீண் பிடிவாதம் ? இது என்ன பைத்தியக்காரத்தனம் ?” இங்கு தான் தமிழ்நாடு ஏமாந்து கொண்டிருக்கிறது. கேரளா இதுவரை செய்த அநியாயங்கள், புதிய அணை கட்டி இனி செய்ய உத்தேசித்திருக்கும் அயோக்கியத்தனங்கள் – இவை எதுவுமே வெளி உலகுக்குத் தெரியவில்லை. ஏன் தமிழ் நாட்டிலேயே – சென்னையிலேயே கூட, படித்தவர்கள் பலருக்கு கூட தெரியவில்லை ! புதிய அணை கட்டுவதில் என்ன தவறு ? -அதான் அதே அளவு தண்ணீர் தருகிறேன் என்கிறார்களே என்று தமிழர்களே கேட்கிறார்கள். தமிழ் நாளிதழ்களும், அரசியல் கட்சிகளும் தொலைக்காட்சிகளும் கூட தமிழ் மக்களை தயார் படுத்துவதில் தவறி விட்டன என்று தான் சொல்ல வேண்டும். இனியாவது விழித்துக் கொள்ள வேண்டும். புதிய அணை கட்டுவதாகச் சொல்வதில் இருக்கும் சதி பற்றி விவரமாக அகில இந்திய அளவில் எடுத்துச் சொல்ல வேண்டும். இந்த வலைத்தளத்தைப் படிப்பவர்களுக்காக – நான் எனக்குத் தெரிந்ததை சுருக்கமாக கீழே தருகிறேன். முல்லைப் பெரியாறு அணை கட்டப்பட்டது பிரிட்டிஷ் ஆண்ட காலத்தில் – 1895ல். அப்போது இந்த அணை கட்டும் இடம் திருவாங்கூர் சமஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் இருந்ததாக கருதப்பட்டது (உண்மை அது அல்ல.தமிழ் நாட்டின் வரையரைக்குள் தான் இருந்தது) எனவே பிரிட்டிஷார்- திருவாங்கூர் மஹாராஜாவுடன் இந்த அணை கட்டப்படும், மற்றும் அதன் நீர்ப்பிடிப்பு பகுதியான சுமார் 8000 ஏக்கர் நிலத்தை 999 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்து (ஆண்டுக்கு ரூபாய் 40,000/- குத்தகைப் பணம் ) இந்த அணையை 1887ல் கட்ட ஆரம்பித்து 1895ல் கட்டி முடித்தனர். இதில் வேடிக்கை என்னவென்றால், இதில் அடிப்படையான பெரியாறு உற்பத்தியாவது தமிழ் நாட்டில் தான். அணையும் தமிழ் நாட்டிற்கு சொந்தமானது. அதை நிர்வகிப்பதும் தமிழ் நாடு தான். ஆனால் இடம் மட்டும் கேரளாவிற்கு சொந்தம். அதிகாரம் செலுத்துவதும் அவர்களே ! இந்த அணையின் உயரம்-கொள்ளளவு -152 அடி. இதன் மூலம் பாசனம் பெறும் நிலம் – சுமார் 2,08,000 ஏக்கர். மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 4 மாவட்டங்களைச் சேர்ந்த 10 லட்சம் விவசாயிகள் பாசனத்திற்கும், 60 லட்சம் மக்கள் குடிநீருக்கும் இந்த அணையை நம்பி இருக்கிறார்கள். இந்த அணை பறிக்கப்பட்டால் – இத்தனை இடங்களும் பாலைவனங்கள் ஆகும். இத்தனை ஜனங்களும் பிழைப்பு பறிபோய் – பிச்சைக்காரர்கள் ஆவார்கள். பிரச்சினை ஆரம்பித்தது எப்படி ? எப்போது ? கேரளா, இதற்கு சுமார் 50 கிலோமீட்டர் கீழே, இடுக்கியில் 1976ல் ஒரு அணையும் நீர் மின்நிலையமும் கட்டியது. பின்னர் தான் ஆரம்பித்தன அத்தனை தொல்லைகளும். பெரியாறு அணையின் மொத்த கொள்ளளவே 15.66 டிஎம்சி தான்.அதிலும் சுமார் 10 டிஎம்சியை தான் பயன்படுத்த முடியும். (104 அடி வரை டெட் ஸ்டோரேஜ் .) ஆனால் இடுக்கி இதைப் போல் 7 மடங்கு பெரியது. கொள்ளளவு 70 டிஎம்சி. பெரிய அணையைக் கட்டி விட்டார்களே தவிர அது நிரம்பும் வழியாகக் காணோம். 3 வருடங்கள் பொறுத்துப் பார்த்தார்கள். பெரியாறு வருடாவருடம் நிரம்பிக் கொண்டு இருந்தது. ஆனால் இடுக்கி நிரம்பவே இல்லை. அப்போது போடப்பட்ட சதித்திட்டம் தான் – பெரியாறு அணைக்கு ஆபத்து என்கிற குரல் -கூக்குரல். சுண்ணாம்பு அணை உடைந்து விடும். அதிலிருந்து வெளிவரும் நீரால் 35 லட்சம் மக்கள் செத்துப் போவார்கள். எனவே உடனடியாக புதிய அணை கட்டுவதே தீர்வு ! புதிய அணையினால் அவர்களுக்கு என்ன லாபம் ? மேலே இருக்கும் பழைய அணையை இடிப்பதால், நீர்பிடிப்பு பகுதியிலிருந்து அத்தனை நீரும் நேராக இடுக்கிக்கு வந்து அதை நிரப்பும். சரி நிரம்பட்டுமே. நல்லது தானே ! அதான் தமிழ்நாட்டுக்கு இதே அளவு தண்ணீர் தருகிறேன் என்று சொல்கிறார்களே என்று உடனே மக்கள் கேட்கிறார்க்ள். அங்கே தான் இருக்கிறது அவர்கள் சாமர்த்தியம். பெரியாறு அணை இருப்பது கடல் மட்டத்திலிருந்து 2709 முதல் 2861 அடி உயரம் வரை. இதிலிருந்து மலையைக் குடைந்து குகைப்பாதை வழியாக தண்ணீர் தமிழ் நாட்டை நோக்கி கொண்டு வரப்படுகிறது. புதிய அணையை கட்டப்போவது 1853 அடி உயரத்தில்.இந்த அணை கட்டப்படும் உயரத்திலிருந்து தமிழ் நாட்டிற்கு தண்ணீரைத் திருப்பி விட முடியாது. நமக்கு பெரியாறு அணையிலிருந்து நீர் எடுத்து வரும் பாதை இதை விட உயரத்தில் ஆரம்பித்து, ஒரு கிலோ மீட்டர் பயணத்திற்கு பிறகு 5704 அடி நீளமுள்ள – மலையைக் குடைந்த குகை வழியாக திசை மாறி வந்து பின்னர் கீழே வைகையில் கலக்கிறது. அணையைக் கட்டிய பிறகு, இவர்கள் உண்மையாகவே விரும்பினாலும் நீரைத் திருப்ப முடியாது. மேலும் புதிய அணையிலிருந்து ஆண்டு முழுவதும் நீர்மின்சாரம் உற்பத்தி செய்ய நீரை வெளியேற்றிக் கொண்டே இருக்கப் போகிறார்கள். எனவே அணை எப்போதுமே முழுவதுமாக நிரம்பி இருக்காது.தமிழ் நாட்டிற்கு தண்ணீர் நிச்சயமாக கிடைக்காது. புதிய அணையினால் தமிழ் நாட்டிற்கு பயன் இல்லை – புரிகிறது. ஆனால் பழைய அணை சுண்ணாம்பு அணை – எப்போது வேண்டுமானாலும் உடைந்து விடும். 35 லட்சம் மக்கள் செத்து விடுவார்கள் என்கிறார்களே – பயம் உண்மையானது போல் தோன்றுகிறதே ?அயோக்கியத்தனம்.வடிகட்டிய அயோக்கியத்தனம். முதலாவதாக – பெரியாறு அணை உடைந்தால் தண்ணீர் – மலைப் பள்ளத்தாக்குகள் வழியாகப் பாய்ந்து – நேராக கீழே உள்ள இடுக்கி அணையைத் தான் வந்தடையும். பெரியாறு அணையிலிருந்து அதன் முழு நீரும் (10 டிஎம்சி) ஒரே நேரத்தில் வெளியேறினாலும், நேராக அதைப்போல் 7 மடங்கு கொள்ளளவு உடைய இடுக்கி அணையைத் தான் வந்தடைய போகிறது. இடையில் எந்த நாடு, நகரமும் இல்லை. வாதத்திற்காக இடுக்கி அணை ஏற்கெனவே நிரம்பி இருந்தாலும் – வெளியேறும் நீர் பெரியாறு அணையிலிருந்து இடுக்கி வந்து சேர 4 மணி நேரம் ஆகும். அதற்குள்ளாக இடுக்கியிலிருந்து தேவையான நீரை வெளியேற்றி விட முடியும் ! எனவே வெள்ளத்தால் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் என்கிற பேச்சே அபத்தமானது. இரண்டாவதாக – 1976ல் இடுக்கி அணையை கட்டினார்கள். 1979ல் பெரியாறு அணை உடையப்போகிறது என்று குரல் எழுப்பினார்கள். பயத்தைக் கிளப்பினார்கள். சுப்ரீம் கோர்ட் வரை போனார்கள். 2000ஆவது ஆண்டு சுப்ரீம் கோர்ட் நிபுணர் குழுவை அமைத்தது. நிபுணர் குழுவின் ஆலோசனைப்படி அணை அனைத்து விதங்களிலும் பலப்படுத்தப்பட்டது. கேரளா சொல்வது போல் இது வெறும் சுண்ணாம்பு அணை அல்ல. ஏற்கெனவேயே முதல் தடவையாக 1933ல் 40 டன் சிமெண்ட் கலவை சுவரில் துளையிட்டு உள்ளே செலுத்தப்பட்டது. மீண்டும் 1960ல் 500 டன் சிமெண்ட் உள் செலுத்தப்பட்டது. 2000ஆவது ஆண்டு சுப்ரீம் கோர்ட் சென்ற பிறகு – நிபுணர் குழுவின் ஆலோசனைப்படி – லேடஸ்ட் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி, கேபிள் ஆன்கரிங் முறையில் அணையுள் கான்க்ரீட் கலவை செலுத்தப்பட்டது. வெளிப்புறமாக – ஒரு கவசம் போல், கிட்டத்தட்ட புது அணையே போல், கான்க்ரீட் போடப்பட்டு, ஒரு புத்தம்புதிய கான்க்ரீட் அணையே உருவாக்கப்பட்டு விட்டது. கீழே உள்ள வரைபடத்தைப் பார்த்தால் நன்றாகப் புரியும். இதன் பிறகு தான், 27/02/2006 அன்று, சுப்ரீம் கோர்ட், இனி அணைக்கு எந்த ஆபத்தும் இல்லை என்பதை நிபுணர் குழுவின் மூலம் உறுதி செய்துகொண்டு – 156 அடிவரை தண்ணீர் தேக்கிக் கொள்ளலாம் என்று அனுமதியே கொடுத்தது. விட்டார்களா நமது கேரள சகோதரர்கள் ? மீண்டும் சதி. ஒரு மாதத்திற்குள்ளாக, கேரள சட்டமன்றத்தில் புதிய சட்டம் இயற்றி, சுப்ரீம் கோர்ட் உத்திரவையே செல்லாததாக்கி விட்டார்கள்.வழக்கம் போல் தமிழன் இளிச்சவாயன் ஆகி விட்டான். மீண்டும் கோர்ட் பின்னால் அலைகிறோம். இப்போது, இன்னும் வழக்கு சுப்ரீம் கோர்ட்டின் பரிசீலனையில் இருக்கும்போதே – தீர்ப்பு அவர்களுக்கு பாதகமாக இருக்குமோ என்கிற தவிப்பில் – மீண்டும் நாடகம் ஆடுகிறார்கள். அணைக்கு ஆபத்து -புதிய அணை கட்ட வேண்டும் என்று. பாராளுமன்றத்தில் குரல் கொடுக்கிறார்கள். பிரதமரை போய்ப் பார்க்கிறார்கள். உண்ணாவிரதம் இருக்கிறார்கள். பந்த் நடத்துகிறார்கள். இப்போதைக்கு அவர்கள் குரல் தான் பலமாகக் கேட்கிறது. வெளிமக்கள் அவர்கள் பக்கம் நியாயம் இருக்கிறது என்று நினைக்கத் தொடங்கி விட்டார்கள்

நன்றி:- கோபிநாத்

 
4 Comments

Posted by on December 29, 2011 in Uncategorized

 

AMWAY – ஆம்வே [எனக்கு வந்த மின்னஞ்சல்]

“AMWAY ” இந்திய மக்களுக்கு வேலைவாய்ப்பு தருவதாக உலா வரும் ஒரு அந்நிய நிறுவனம். இந்த நிறுவனத்தின் சில கொள்ளை உண்மைகளை கண்டறிய நான் எடுத்த சிறு முயற்சியின் விளைவுதான் இந்த பதிவு. இந்த நிறுவனத்தில் உள்ள நண்பர்கள் கண்ணில் பட்டவர்களை எல்லாம் பார்த்து சொல்லும் முதல் வார்த்தை “ஒரு பிஸ்னஸ் சொல்றேன் பன்றிங்களா?” இது தான் MLM நண்பர்களின் தாரக மந்திரம். ஒருவன் என்னதான் மாதம் முப்பதாயிரம் ரூபாய் சம்பாதிச்சாலும் உங்களுக்கு மேல் வருமானம் வருவதற்கு நான் ஒரு பிஸ்னஸ் சொல்லுறேன் பண்ணுங்க என்றால் மனுஷன் உடனே மண்டைய ஆட்டத்தான் செய்வான். அப்படி இருக்கும்போது வறுமையில் இருப்பவனையும், நடுத்தரகுடும்பத்தை சார்ந்தவனையும் பார்த்து இந்த வார்த்தையை சொன்னால் என்ன மாட்டேன் என்றா சொல்லுவான்?.

ஒருவனை இரண்டு வகையில் சுலபமாக மூளைச்சலவை செய்துவிடலாம் ஒன்று “இந்த தொழில் செய்தால் நீ செல்வந்தன் ஆகிவிடலாம் என்று, மற்றொன்று நீ இதை சாப்பிட்டால் உன் நோய் குணமாகிவிடும்” என்று . இவை இரண்டையும் சொல்லி சுலபமாக கொள்ளையடிக்கும் கொள்ளைக்கும்பல் இனத்தை சேர்ந்ததுதான் “AMWAY” இதுவரை தமிழ்நாட்டில் பல MLM நிறுவனங்கள் பலவிதமான வித்தைகளைக்காட்டி கொள்ளையடித்து ஓடிவிட்டனர். ஆனால் AMWAY நிறுவனம் கொஞ்சம் வித்தியாசமானது, சட்டப்பூர்வமான கொள்ளை கும்பல்.

ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு வணீக ரீதியிலான பொருட்கள் விற்பனைக்கு வருகிறது என்றால் உள்ளூர் கம்பனிகளும், நிறுவனங்களும் பாதிக்காத வகையில்தான் முடிவு எடுக்கப்படும். காரணம் வேறு ஒரு நாட்டில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்தால் உள்ளூர் நிறுவனங்களுக்கு வெளிநாட்டு நிறுவனத்தால் நஷ்ட்டம் ஏற்பட்டுவிடும் என்பதால், இது நடக்காதவாறு கவனித்துக்கொள்வது அரசின் கடமை. இந்த கொள்கையைத்தான் வளர்ந்துவரும் நாடுகள் என்று சொல்லப்படும் அனைத்து நாடுகளும் பின்பற்றி வருகின்றன. ஆனால் நம் இந்தியா அரசு மட்டும் இதுப்போன்ற நிறுவனங்களுக்கு வளைந்து கொடுத்து வருகிறது. இப்படி அரசின் அனுமதியில் கொள்ளையடிக்கும், மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் நிறுவனங்களில் ஒன்று தான் இந்த நிறுவனம். இந்த AMWAY நிறுவனம் விற்பனை செய்யும் அனைத்துப்பொருட்களும் FMCG(FAST MOVING CONSUMER GOODS) மற்றும் PHARMACEUTICAL பிரிவை சேர்ந்தவை.

FMCG பொருட்கள் என்றால் நாம் தினமும் பயன்படுத்தும் பொருட்கள் பிரிவை சேர்ந்தது(உதாரணம்: சோப்பு,ஷாம்பு போன்றவை). இது போன்ற பொருட்களை விற்பனை செய்ய இந்தியாவில் ஏற்கனவே பல இந்திய நிறுவனங்கள் போட்டிப்போட்டுக்கொண்டு வருகின்றன, பின்பு எதற்காக இந்த பொருட்களை விற்பனை செய்ய அந்நிய நிறுவனத்துக்கு அரசு அனுமதி கொடுக்க வேண்டும்?. அடுத்தது PHARMACEUTICAL பொருட்கள், ஒருவனுக்கு உடலில் ஏதாவது பாதிப்பு என்றால் அவன் உடனே மருத்துவரை ஆலோசிப்பதுதான் சிறந்தது என்று அரசே அறிவுறுத்தி வருகிறது அப்படி இருக்கும்போது இவர்கள் எப்படி மருந்து பொருட்களை நேரடியாக விற்பனை செய்யலாம்?.

பொருளாதார வீழ்ச்சியும் ஆம்வே நிறுவனமும்:

ஒரு நாட்டில் பொருளாதார வீழ்ச்சி(RECESSION) ஏற்பட்டால் பங்குசந்தையில் உள்ள அனைத்து நிறுவனங்களும் பாதிப்படையும்/பங்கு விலைகள் வீழ்ச்சி அடையும். இது போன்ற நேரங்களில் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைவதை சற்று தடுத்து நிறுத்துவது சில செக்ட்டார்கள் தான், அதனை டிபன்ஸ் செக்டார்(DEFENCE SECTOR) என்று சொல்வார்கள். அந்த DEFENCE SECTOR என்று சொல்லப்படும் செக்டர்களில் முக்கியமான இரண்டு செக்டார்கள் தான் இந்த FMCG மற்றும் PHARMACEUTICAL செக்டோர்கள். இந்த இரண்டு பிரிவுகளையும் உள்ளடக்கி விற்பனை செய்து வரும் நிறுவனம்தான் இந்த AMWAY நிறுவனமும். ஆனால் இது இந்திய நிறுவனம் இல்லை, இது ஒரு அயல்நாட்டு நிறுவனம். நம் நாட்டில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டால் இந்த நிறுவனத்தால் நம் நாட்டிற்கு கடுகளவும் பயன் இல்லை. இப்படி இருக்கும்போது இந்த AMWAY நிறுவனம் DIRECT SALE என சொல்லப்படும் நேரடி விற்பனையில் வேறு ஈடுப்பட்டு வருகிறது. இதனால் DEFENCE SECTOR என சொல்லப்படும் இந்திய நிறுவனங்களுக்கு பதிப்பு கண்டிப்பாக இருக்கும், இப்படிப்பட்ட சூழ்நிலையில் எதிர்க்காலத்தில் நமது நாட்டில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டால் பாதிப்பு முன்பை விட அதிகமாகவே இருக்கும். இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் நமது பாரத பிரதமர் இந்த AMWAY நிறுவனத்துக்கு அனுமதி கொடுத்து வருகிறார் என்றால் நீங்களே யோசித்துப்பாருங்கள் மன்மோகன் சிங்கின் திறமையை.

இதனால் நமக்கு என்ன பாதிப்பு என நீங்கள் நினைத்து விட முடியாது, கண்டிப்பாக பாதிப்பு உண்டு. நாட்டில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டால் வேலை இழப்பால் பாதிக்கப்படப்போவது நாம்தான் மன்மோஹன்சிங் இல்லை. இவர் எப்படியும் அரசு வருவாயில் காலத்தை ஓட்டிவிடுவார். இப்போதாவது இந்திய குடிமகனுக்கு இருக்கும் கடமையை உணர்ந்து செயல்படுங்கள்.

இதுவரை நான் எழுதியதெல்லாம் நாட்டிற்கு பொருளாதார ரீதியில் எந்த ஒரு பாதிப்பும் வந்து விடக்கூடாது என்ற எண்ணத்தில் தான். ஆனால் இதையெல்லாம் பொருட்படுத்தாமல் எவன் எப்படி போனால் எனக்கென்ன எனக்கு பணம் வந்தால் போதும் என்று ஒருசிலர் இருப்பார்கள், இதோ உங்களுக்காகவே ஒரு சிறிய விளக்கம். நீங்கள் AMWAY நிறுவனத்தில் சம்பாதிப்பதை விட இழப்பதுதான் அதிகம் என்பதற்கு.

ஏமாற்றும் வழிகள்:

இந்த நிறுவனத்தில் யாரும் பிடித்துபோய் சேருவது இல்லை, நண்பனோ அல்லது உறவினரோ ஒரு பிசினஸ் பண்ணலாம் என்று சொல்லி ஒரு குறிப்பிட்ட இடத்துக்கோ அல்லது வீட்டிற்கோ அழைத்து செல்வார்கள். அங்கு அவர்களால் முடிந்தளவுக்கு மூளைச்சலவை செய்யப்படும். உதாரணத்துக்கு ஒரு குறுப்பிட்ட நபரை காண்பித்து இவர் மாதம் ஒருலட்சம்/ஐம்பதாயிரம் ரூபாய் ஆம்வே நிறுவனத்தால் சம்பாதிக்கிறார் என்று ஆசை வார்த்தையை கட்டவில்ப்பார்கள். இந்த வார்த்தையால்தான் பலர் நமது வறுமைக்கு ஒரு விடிவு வந்துவிடாதா என்று சேர்ந்து விடுகின்றனர்.

நமது இந்திய நிறுவனங்கள் ஒரு பொருளை தயாரிக்க செலவிடும் விற்பனை செலவில் இருந்து 30 % தான் செலவு செய்கின்றன, ஆனால் அது பயனாளர் கைக்கு வரும்போது மொத்த விற்பனை விலைக்கு வருகிறது, இதனால் நஷ்டம் அடைவது பயனாளர்தான். பயனாளர் மூலம் கடைக்காரர்,விநியோகஸ்த்தர்,விளம்பரதாரர் என பலர் லாபம் பெறுகின்றனர் என்று சொல்லிதான் இந்த நிறுவனத்தின் ஊழியர்கள் மக்களை ஏமாற்றுகின்றனர். இவர்கள் சொல்வது உண்மைதான், மூன்று ரூபாய் பொருட்செலவில் தயாரிக்கும் பொருளை நாம் பத்துரூபாய்க்கு வாங்குவது நிஜம்தான், இந்த வார்த்தைகளை கேட்டு பலர் ஏமார்ந்து விடுகின்றனர். நமது இந்திய நிறுவனத்துடன் ஆம்வே நிறுவனத்தின் பொருட்களின் விலையை ஒப்பிட்டு பார்த்தால் இந்திய நிறுவனங்களின் பொருட்கள்தான் மிகவும் விலை குறைவாக உள்ளது.

►இந்திய நிறுவனத்தின் தரமான சோப் 15 – 20 ரூபாய்(கடைக்காரர், விநியோகஸ்த்தர், விளம்பரதாரர், நிறுவன லாபம் எல்லாம் உட்பட).

►ஆனால் ஆம்வே நிறுவனத்தில் ஒரு சோப்பின் விலை 37 ரூபாய்(விளம்பரதாரர்,விநியோகஸ்த்தர், கடைக்காரர் இவர்கள் யாருக்கும் லாபம் கொடுக்காமலே)

மேலும் ஆம்வே நிறுவன பொருட்களின் விலைகள்.

TOOTHBRUSH(1) – 19 ரூபாய்

HAIR OIL(500 ML) – 95 ரூபாய்

SHAVING CREAM(70G) – 86 ரூபாய்

OLIVE OIL (1 LITRE) -400 ரூபாய்

FACE WASH -229 ரூபாய்

PROTIEN POWDER(1KG) – 2929 ரூபாய்

மேலே இருக்கும் விலை பட்டியல் உதாரணம் மட்டும்தான் கொஞ்சம் யோசித்துப்பாருங்கள் இந்த விலை நமது இந்திய நிறுவனத்தின் விலையை விட குறைவா?. இத்தனைக்கும் இவர்கள் விளம்பர நிறுவனங்கள் , விநியோகச்த்தர்கள், கடைக்காரர் என பலத்தரப்பட்டவர்களின் தொழில்களுக்கு நஷ்ட்டம் விளைவித்து மக்களுக்கு குறைந்த விலைக்கு(நேரடி விற்பனை(DIRECT SALE)) விற்பதாக சொல்லி விற்று வருகின்றனர்.

நேரடி விற்பனை(DIRECT SALE) என்றால் ஒருபொருளின் தயாரிப்பு செலவில் நிறுவனத்தில் லாபம் மட்டுமே வைத்து குறைந்த விலைக்கு விற்பதுதான் DIRECT SALE. ஆனால் ஆம்வே நிறுவனம் நேரடி விற்பனை செய்வதாக தம்பட்டம் அடித்துக்கொண்டு மற்ற இந்திய நிறுவனங்களை விட அதிக விலைக்கு விற்று வருகின்றனர். இந்திய நிறுவனங்கள் ஒரு டூத்பிரஷ் தயாரிக்க செய்யும் செலவு 4 ரூபாய்தான் ஆகிறது ஆனால் விற்பனை செய்யும்போது 15 ரூபாய்க்கு விற்பதாக ஆம்வே நிறுவனம்(ஊழியர்கள்) நமது இந்திய நிறுவனம் மீது குற்றம் சொல்கிறது. ஆனால் இவர்கள் விற்பனை செய்யும் டூத்பிரஷ்ஷின் விலையோ 19 ரூபாய் அப்படியென்றால் இவர்களுக்கு தயாரிக்க ஆகும் செலவே 15 ரூபாயா?

<font color = "red">

► ஆம்வே நிறுவனத்தில் ஒருவர் இணைய வேண்டும் என்றால் 995 ரூபாய் கட்ட வேண்டும். (எந்த ஒரு செலவும் இல்லாமல் ஆம்வே நிறுவனத்துக்கு 995 ரூபாய் லாபம்)

►பின்பு தனக்கு கீழே இரண்டு நபர்களை சேர்த்து விட வேண்டும்.

(எந்த ஒரு செலவும் இல்லாமல் நிறுவனத்துக்கு 1990 ரூபாய் லாபம், ஆக மொத்தம் உங்களால் ஆம்வே நிறுவனத்துக்கு 2985 ரூபாய் லாபம். இது நீங்கள் அந்த நிறுவனத்தில் இணையும்போது மட்டும்தான்)

► இந்த நிறுவனத்தில் நீங்கள் சம்பாதிக்க வேண்டும் என்றால் மாதம் குறைந்தது 6000 முதல் 6200(100 pv) ரூபாய்க்கு பொருட்கள் வாங்க வேண்டும். ஒரு நிறுவனம் தனது பொருட்களை தயாரிக்க ஆகும் செலவு பொருட்களின் விற்பனை செலவில் 30 % தான். சரி ஆம்வே நிறுவனத்துக்கு 50 % என்று வைத்தால் கூட 3000 ரூபாய் லாபம் வருகிறது.

இப்போது கொள்ளை கும்பலின் கோள்ளை கணக்கை பாருங்கள்:►நீங்கள் ஆம்வே நிறுவனத்தில் இணையும்போது கட்டிய தொகை 995 ரூபாய்.

►நீங்கள் பொருட்கள் வாங்கிய விலையில் கம்பனி லாபம் 3000 ரூபாய்(6000-3000).இது 50 % தான் லாபம், கூடலாம் .

►ஆக மொத்தம் நீங்கள் இந்த நிறுவனத்தில் இணையும் போதே உங்கள் பக்க இழப்பு 3995 ரூபாய்.

இந்த நிறுவனத்தில் இணைபவர்கள் எவனோ ஒருவன் இந்த நிறுவனத்தில் ஒருலட்ச்சம் ரூபாய் சம்பாதித்து விட்டான் நாம் ஏன் சம்பாதிக்க முடியாது என்று எண்ணித்தான் இணைகின்றனர் அவர்களுக்காக ஒரு சிரிய விளக்கம்.

►ஒருவன் ஒருலட்ச்ச்ம் ரூபாய் இந்த நிறுவனத்தில் சம்பாதித்தான் என்றால் இவன் தனக்கு கீழே குறைந்தது 100 நபர்களையாவது இணைத்திருப்பான்.(ஒரு நபர் இணையும்போது இந்த நிறுவனத்தில் கட்ட வேண்டிய தொகை 995 ரூபாய்)

100 x 995 = 99500 ரூபாய்

இந்த ஒருவன் மூலம் நிறுவனம் அடைந்த லாபம் மட்டும் 99500 ரூபாய். ஆனால் இதில் அவனுக்கு எந்த ஒரு லாபமும் கிடையாது. இவனுக்கு கீழே இருக்கும் ஒவ்வொருவரும் மாதம் 6000 ரூபாய்க்கு பொருட்கள் வாங்க வேண்டும் இதை 100 PV என்று சொல்வார்கள்.

3000 x 100 = 300000 ரூபாய்

அப்படிபார்த்தால் இவன் ஒருவன் மூலம் ஆம்வே நிறுவனத்துக்கு வந்த லாபம் மட்டும் 399500 ரூபாய். நிறுவனத்துக்கு ஒருமாத லாபம் 300000 ரூபாய் (மூன்று லட்சம்).

இவ்வளவு கொள்ளைகளும் போதாதென்று மேலும் ஒரு கொள்ளையாய் கணக்கை புதுப்பித்தல் ( ACCOUNT RENEWABLE) சார்ஜ் வேறு 480 ரூபாய் ஆண்டொன்றுக்கு.

இன்னொரு கொள்ளை விதிமுறை பற்றி சொல்லவேண்டும் என்றால் இந்த நிறுவனத்தில் இணைந்தால் வாங்கும் பொருட்களுக்கெல்லாம் கமிஷன் கொடுக்க மாட்டார்கள் அதிலும் ஒரு கொள்ளை விதிமுறையை வகுத்துள்ளனர். ஒருவன் இந்தநிருவனத்தில் இணைந்திருக்கிறான் என்றால் மாதம் 6000 ரூபாய்க்கு பொருட்களை கண்டிப்பாக வாங்கியே தீர வேண்டும் இல்லையென்றால் இவனுக்கு கீழே எவ்வளவு பொருட்கள் விற்பனை ஆனாலும் இவனுக்கு கமிஷன் கிடையாது. அதேபோல் இவர்கம் PV என்னும் POINT VALUE வேறு கடைப்பிடிக்கிறார்கள் தனக்கு கீழே 300 அல்லது 900 PV , அதற்கு மேல் பொருட்கள் விற்பனை செய்தால் தான் சம்பாதிக்க முடியும்.

300 PV = 16,500 ரூபாய் (விற்பனை விலையில் சலுகை போக)

900 PV = 49,500 ரூபாய் (விற்பனை விலையில் சலுகை போக)

இந்த PV விஷயத்தில் பல தில்லுமுல்லு வேலைகள் உள்ளது. இந்த நிறுவனத்தில் இணைந்தவர்கள் வீட்டில் உட்க்கார்ந்து கணக்கு போட்டு பாருங்கள் விளங்கும்.

லட்ச்சங்களையும், கோடிகளையும் சம்பாதிக்கலாம் என்று ஆசை வார்த்தையை காட்டி இவர்கள் கோடி கோடியாய் மக்கள் பணத்தை கொள்ளையடித்து வருகின்றனர். ஆனால் இதெல்லாம் அறியாத மக்கள் தனது பணத்தை இது போன்ற நிறுவனங்களில் தொடர்ந்து இழந்துகொண்டேதான் வருகின்றனர். மாதம் பத்தாயிரம் ரூபாய் சம்பாதித்தவன்(கவுரவமாய்) கூட இந்த நிறுவனத்தில் இனைந்து தனது உறவினர்கள் நண்பர்கள் வீட்டில் நாயாய் பேயாய் அழைந்து ஆம்வே பொருட்களை விற்பனை செய்து துளியளவு கூட லாபம் ஈட்ட முடியாமல் இருப்பதே நிஜம்.

இந்த நிறுவனத்தில் நான் பார்த்த மிகப்பெரிய கொடுமை ஒரு வாலிபன் தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு இந்த நிறுவனத்தில் நாயாய் பேயாய் அழைந்து முழு நேரமாக தனது பொருட்களை விற்பனை செய்து, ஆட்களை சேர்த்து விட்டு வருவதுதான் . இவன் தனது பழைய நிறுவனத்தில் வாங்கிய மாத சம்பளம் 8000 ரூபாய், ஆனால் இந்த ஆம்வே நிறுவனத்தில் இவன் வாங்கிய சம்பளம் பாதி கூட இல்லை இதுவும் இவன் தான் ஏமார்ந்து வருவதை உணரும் வரைதான்.இந்த பதிவை படிக்கும் ஒவ்வொரு வலைப்பதிவருக்கும் ஒரு சிறு வேண்டுகோள்:

தயவு செய்து இந்த பதிவை உங்கள் நண்பருக்கோ அல்லது உறவினருக்கோ இந்த பதிவில் உள்ள எழுத்துக்கள் சென்றடைய உதவுங்கள். இதில் உள்ள கருத்துக்களை எடுத்து சொல்லுங்கள்.

—————————-x—————————நான் ஒருத்தனிடம் ஏமாந்தேன் நீ என்னிடம் ஏமாறு என்பதே மல்டி லெவல் மார்கெட்டிங் தாரக மந்திரம்
.

 
4 Comments

Posted by on December 28, 2011 in Uncategorized

 

கூகுளில் உமது வலைப்பூ தெரிகிறதா?


உலக அளவில் அதிகமான மக்கள் பயன்படுத்தும் தேடியந்திரம் கூகுள் என்பது யாருக்கும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. உமது வலைப்பூ வினை கூகுள் தளத்தில் தேடினால் கட்டுகிறதா என்பதைப் பாருங்கள். அவ்வாறு காட்டப்படவில்லை எனில் https://www.google.com/webmasters/tools/submit-url?continue=http://www.google.com/addurl/&pli= தளத்திற்கு சென்று உமது வலைப்பூவை பதிவு செய்யுங்கள்.

இவ்வாறு கூகுள் தளதில்பதிவு செய்வதால் ஏற்படும் பயன்கள்:

கூகுள் வலைத்தளத்தில் உமது வலைப்பூவை இணைப்பதனால் கூகுள் தேடியந்திரம் உமது வலைப்பூவை உலகிற்கு காட்டும். அதன் மூலம் உமது தளத்திற்கு வாசகர்கள் எண்ணிக்கை அதிகமாகும். உமது வலைபூவிலுள்ள தகவல்கள் பலருக்கு சென்றடைய கூகுள் தேடியந்திரம் ஒரு சிறந்த கருவியாய் இருக்கும்.

 
Leave a comment

Posted by on December 28, 2011 in Uncategorized

 

கேரளத்தை ஆளும் மாஸ் ஹிஸ்டீரியா – நன்றி விகடன்

பால் சக்கரியா. மலையாளத்தின் மகத்தான எழுத்தாளர். துணிச்சலான கருத்துகளுக்காகப் பெயர் பெற்றவர். முல்லைப் பெரியாறு அணை விவகாரம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தமிழர்கள் – மலையாளிகள் உறவில் பிளவை உருவாக்கி இருக்கும் நிலையில் சக்கரியாவிடம் பேசினேன்.

”தமிழகம் – கேரளம் இடையே இப்போது நிலவும் கசப்பான சூழல்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?”

”கஷ்டமாகத்தான் இருக்கிறது. வரலாறு, ஒரே ஆட்சியின் கீழ் தமிழகமும் கேரள மும் சேர்ந்து இருந்ததைச் சொல்கிறது. பழந்தமிழில் இருந்து பிரிந்து வளர்ந்த ஒரு கிளைதான் மலையாளம். கேரளத்தின் அநேகப் பகுதிகளில் பல்வேறு காலகட்டங்களிலும் குடியேறிய தமிழர்கள் வசிக்கிறார்கள். அவ்வாறே தமிழகமும் லட்சக்கணக்கான மலையாளிகளுக்கு வாழ்வளிக்கிறது. தமிழர்களும் மலையாளிகளும் நல்ல அண்டை வீட்டுக்காரர்களாகவே இதுவரை நடந்து கொண்டு இருக்கிறோம்.

ஆனால், இப்போது ஏற்பட்டு இருக் கும் சூழல் வருந்தத்தக்கது. முல்லைப் பெரியாறு அணை விஷயத்தில் பல சுயநலக் கட்சிகள் தமிழகத்தையும் கேரளத்தையும், இந்தியா – பாகிஸ்தான்போல எல்லைத் தகராறை நோக்கித் தள்ளிக்கொண்டு இருக்கின்றன. இந்த அரசியலுக்கு ஊடகங்கள் பொறுப்பற்ற ஆதரவைத் தருவதுடன் பிரசாரமும் நடத்தி வருகின்றன. இது மிக ஆபத்தானது!”

”இந்த விவகாரத்துக்குப் பின் தமிழர்கள் மீதான மலையாளிகளின் பார்வை எப்படி இருக்கிறது?”

”நாம் எப்போதுமே சகோதரர்கள்தான். ஆனால், அணையை வைத்து அரசியல்வாதி களும் ஊடகங்களும் நடத்தும் அரசியல், சிலரின் மனதிலாவது பாதிப்பை உருவாக் கத்தான் செய்திருக்கிறது!”

”அணை விவகாரத்தில் கேரளத்தின் நியாயம் என்ன? தமிழர்களிடம் இருந்து மலையாளிகள் எதை எதிர்பார்க்கிறீர்கள்?”

கேரளத்தில் 40 நதிகள் இருக்கின்றன. அவற்றில் வெறுமனே 8 சதவிகித நீரைத்தான் கேரளம் பயன்படுத்துகிறது. மீதி தண்ணீர் வீணாகக் கடலில்தான் கலக்கிறது. இதில் முல்லைப் பெரியாறு அணை மூலம் தமிழகத்துக்குச் செல்லும் நீரானது ஒரு பொருட்டே அல்ல. அதுவும் அந்த நீர்தான் கேரளத்துக்குத் தமிழகத்தில் இருந்து கிடைக்கும் உணவுப் பொருட்களுக்கான ஜீவநாடி என்பதைப் பெரும்பான்மை மலையாளிகள் நன்றாகவே உணர்ந்து இருக்கிறார்கள்.

மலையாளிகள் உண்ணும் சோறும், குழம்புக்குக் காய்கறியும், தின்னும் பழமும், பூஜை மலரும்… அவ்வளவு ஏன்… கறிவேப்பிலைகூட தமிழகத்தில் இருந்துதான் வருகிறது. உண்மையில் மலையாளிகள் தங்கள் எதிர்காலத்துக்காகச் செய்ய வேண்டியது, தாங்கள் வீணாக்கும் 92 சதவிகித தண்ணீரைத் தமிழகத்தில் உள்ள உழைப்பாளிகளான விவசாயிகளுக்கு இன்னும் அதிக அளவு கொடுத்து, அதற்குரிய நியாயமான விலையைப் பெறுவ தும், தங்களிடம் இல்லாத அரிசி, காய்கறி, பழங்களைத் தரமானதாகவும் குறைந்த விலையிலும் கிடைக்க அவர்களிடம் இருந்து உறுதி பெறுவதும்தான். இதை நானே பல முறை பேசியும் எழுதியும் இருக்கிறேன்.

ஆக, தண்ணீர் இங்கு ஒரு பிரச்னை அல்ல. மலையாளிகள் தண்ணீரைப் பிரச்னையாகப் பார்த்தால், அது தவறு.

அதே சமயம், அணையின் பழமை – எல்லா அணைகளையும் போல அச்சத்தை உருவாக்கக்கூடியதுதான். இந்தப் பழமையும் நிலநடுக்க வாய்ப்புகளும்தான் இப்போது அரசியல் நடத்த வாய்ப்பு களாகி இருக்கின்றன. சாதாரண மக்கள் – குறிப்பாக, அணை ஒருவேளை உடைந்தால் பாதிக்கப்படும் சூழலில் உள்ள மக்கள் – அரசியல்வாதிகளும் ஊடகங்களும் நடத்தும் பிரசாரத்தைக் கண்ணை மூடிக்கொண்டு நம்ப வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். அணை இருக்கும் பகுதிக்கு அருகில் சமீபத்தில் ஏற்பட்ட நிலநடுக்கங்கள் அணையை வைத்து நடத்தப்படும் அரசியலுக்கும் அணை மீதான அச்சத்துக்கும் வலு சேர்த்து இருக்கின்றன. அரசியல்வாதிகளும் ஊடகங்களும் இந்தச் சூழலைப் பெரும் ஆரவாரத்துடன் பயன்படுத்திக்கொள்கின்றன.

மொத்தத்தில், புரிந்துணர்வுடனும் அறிவியல் நோக்குடனும் அணுகப்பட வேண்டிய ஒரு விஷயத்தை வைத்து, ‘கும்பல் ஆவேசத்தை’ (மாஸ் ஹிஸ்டீரியா) உருவாக்கிக்கொண்டு இருக்கிறார் கள். வேறு வழி இல்லாத சாதாரண மக்கள், இதற்குப் பலியாகிக் கொண்டு இருக்கிறார்கள். தமிழர் கள் இந்தப் பின்னணியில், கேரள மக்களின் அச்சத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்!”

”அரசியல்வாதிகளையும் ஊடகங்களையும் ஒருசேர விமர்சிக்கும் இந்தத் துணிச்சல் உங்களுக்கு எங்கிருந்து வருகிறது?”

”இது ஜனநாயக நாடுதானே? இங்கு ஒரு குடிமகனுக்கு எந்த ஒரு கருத்தையும் வெளிப்படையாகச் சொல்ல உரிமை இருக்கிறதுதானே? கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரான சக்திகள் எல்லா இடங்களிலுமே இருக்கும். அவற்றுக்கு எல்லாம் பயந்துகொண்டு இருந்தால், ஒரு படைப்பாளி ஒருபோதும் வாயைத் திறக்கவே முடியாது. மாறாக, மக்களை ஆட்டிப்படைப்பவர்களுக்கு எடுபிடியாகத்தான் அவன் இருக்க வேண்டும். அப்படி இருப்பவன் படைப்பாளி அல்ல; மக்கள் விரோதி!”

”இந்தப் பிரச்னைக்குத் தீர்வாக நீங்கள் எதைப் பார்க்கிறீர்கள்?”

”அணை என்பது ஒரு பொறியியல் உருவாக்கம். என்னைப் போன்ற ஓர் எழுத்தாளன் அதைப் பற்றி அறிவியல்பூர்வமாகச் சொல்ல முடியாது. மேலும், ஒரு குடைக் கம்பியைக் கொண்டு அணையின் பலத்தைச் சோதித்துச் சொல்லும் திறன் என்னிடம் இல்லை. (கேரள முன்னாள் முதல்வர் அச்சுதா னந்தன் ஒரு முறை அப்படிச் செய்து காட்டிவிட்டு, அணை பலம் அற்றது என்று சொன்னார்!) அதே சமயம், எனக்குத் தெரிந்து ஒரு தீர்வு இருக்கிறது. அணைப் பொறியியல் தொடர்பாக சர்வதேச அளவில் மிகச் சிறந்த சிலரைக்கொண்ட தன்னிச்சையான ஒரு குழுவை அமைக்கலாம். அந்தக் குழு சொல்லும் எந்தத் தீர்வையும் இரு மாநிலங்களும் நேர்மையாக ஏற்றுக்கொள்ளும் உறுதியைத் தந்து, அவர்களிடம் அணையைப் பற்றி ஆய்வு நடத்தச் சொல்லலாம்.

இந்த இடத்தில் இன்னோர் ஆய்வா என்று என்னைச் சந்தேகக் கண்ணோடு பார்க்கக் கூடாது. இது வரை இரு மாநிலங்கள் சார்பிலும் அமைக்கப்பட்ட ஐ.ஐ.டி. உள்ளிட்ட எல்லா ஆய்வுக் குழுக்களும், அந்தந்த மாநிலங்களின் வாதங்களுக்கு ஏற்ப முடிவு சொல்லியிருப்பதைக் கணக்கில் எடுத் துக்கொள்ள வேண்டும். அந்தக் குழு என்ன சொல்கிறதோ, அதைக் கேட்க லாம். இப்படி ஓர் ஆய்வை நடத்தினால், அதிகபட்சம் ஐந்து கோடி ரூபாய் செலவாகலாம். இரு மாநில அரசுகளுக்கும் இந்தத் தொகை ஒரு பொருட்டே அல்ல. ஆனால், இந்த விஷயத்தில் இரு மாநில அரசுகளும் ஒரே மாதிரியான அக்கறை இன்மையைத்தான் வெளிக்காட்டுகின்றன!”

நன்றி – ஆனந்த விகடன்

 
Leave a comment

Posted by on December 28, 2011 in Uncategorized

 

விண்ணில் இருந்து தமிழகமும், ஈழமும்


நீராரும் கடலுடுத்த நில மடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ் பரதக் கண்டமதில்
தெக்கனமும் அதில் சிறந்த திராவிட நல் திருநாடும்
தக்க சிறு பிரைநுதலும் தரித்த நறும் திலகமுமே
அத்திலக வாசனை போல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ் மணக்க இருந்தபெரும் தமிழணங்கே ! தமிழணங்கே !
உன் சீர் இளமை திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே !
வாழ்த்துதுமே ! வாழ்த்துதுமே !

 
Leave a comment

Posted by on December 28, 2011 in Uncategorized